பாண்டியராஜனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமம். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பிறந்தது 1959 ஏப்ரல் 26. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மாஃபா,வறுமையான சூழலால் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீக்குச்சி அடுக்கும் வேலை பார்த்தபடி படிக்கவும் செய்தார். சிவகாசியில் உள்ள எஸ்.ஹெச்.என்.வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பையும் நிறைவு செய்தார். படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது. அங்கு சிறப்பாக படித்து கோல்டு மெடல் பெற்றார். அதன்பின் ஜாம்ஷெட்பூரில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் வங்காளத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எம்என்சியான ஆக்சிஜன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.

அதன்பின் வெளிநாட்டில் செட்டில் ஆக நினைக்காமல் 1992ம் ஆண்டு சிறிய முதலீட்டில் மாபா என்கிற ஐ.டி நிறுவனத்தை சென்னையில் துவங்கினார். அன்றில் இருந்து தான் மாஃபா பாண்டியராஜன் ஆனார். சுமார் ரூ. 60,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் மாபாவின் அசுர உழைப்பால் 2010ம் ஆண்டில் ரூ. 1000 கோடி இலக்கை எட்டியது. இதுவரை 3.5 லட்சம் ஊழியர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஐடி துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் மாஃபா. அதோடு நில்லாமல் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான விதவைகளுக்கும், ஏழை பெண்களுக்கு கணினி தொழில் பயிற்சி, சிறுதொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளார். அவரது மனைவி லதா பாண்டியராஜன் அந்த தொண்டு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

தனது அரசியல் ஆர்வம் காரணமாக பி.ஜே.பி.,யில் இணைந்தார் மாபா. அந்த சமயத்தில் தான் விஜயகாந்த் அசுர வளர்ச்சி அடைந்தார். பி.ஜே.பி.,யில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வில் ஐக்கியமானார். கேப்டனின் ஆலோசகராக இருந்தார் மாஃபா. விஜயகாந்த்தும் அவருக்கு விருதுநகர் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அதே சமயத்தில் தேர்தல் பிரிவுச் செயலாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார்.

தே.மு.தி.க எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான போது, மனக்கசப்பின் காரணமாக மாஃபா பாண்டியராஜனும் அ.தி.மு.க முகாமிற்கு மாறினார். 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க.,வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா.

தே.மு.தி.க.,வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.,வில் இணைந்த யாருக்கும் சீட் கிடைக்காத நிலையில் இவருக்கு மட்டும் ஆவடி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆவடி தொகுதியில் மூன்று நகராட்சிகளில் இரண்டு தி.மு.க.,வின் கையில் இருக்கும் நேரத்தில் தேர்தலைச் சந்தித்தார் மாஃபா. தேர்தலில் தனது மாணவர்கள் பலருடன் கலந்தாலோசித்து MyAvadi App என்கிற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கி ஆவடி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அப்போதே ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்றார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களின் பேச்சையும் ஜெயலலிதா கூர்ந்து கவனித்து வந்தார். அதில் மாஃபா பாண்டியராஜன் பேச்சை அதிகம் கவனித்தார். தி.மு.க உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் முழுக்க முழுக்க அமெரிக்க ஆங்கிலத்தில் பேசியபோது அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் என்ன சொல்வது என புரியாமல் விழி பிதுங்கினர். அப்போது தோரணையாக எழுந்து அவரைவிட அருமையாக ஆக்ஸ்போர்டு ஆங்கிலத்தில் புள்ளி விவரத்தோடு பேசி பழனிவேல் தியாகராஜனை தெரிக்க விட்டார் மாபா. இதைப் பார்த்த ஜெயலலிதா மாஃபாவின் ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்துபோனார். பல இடங்களில் அமைச்சர்கள் பேச வேண்டிய இடத்தில் பாண்டியராஜன் பேசி லைக்ஸ் அள்ளினார்.

இதேபோல ஜி.எஸ்.டி மசோதாவை எதற்காக தமிழக அரசு எதிர்க்கிறது என்பது பற்றி ஒருமணி நேரம் விரிவாக உரையாற்றினார். அதில் இந்த மசோதா கொண்டு வருவதன் மூலம் காங்கிரஸ்- பி.ஜே.பி கட்சிகள் எப்படி ஆதாயம் அடையும் என்பதையும், இதனால் மாநில அரசுகளுக்கு எவ்வுளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் விரிவாக விளக்கினார் மாஃபா. இதுவும் மாஃபா மீதான இமேஜை ஜெயலலிதாவிடம் பல மடங்கு உயர்த்தியது. அதோடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமினின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் அந்த துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டார் புள்ளிவிவரப்புலி மாஃபா பாண்டியராஜன்.

ஆனால், தற்போது மன்னார்குடி மாபியா கும்பலின் பினாமி ஆட்சியில் தொடர வேண்டாம் என தொகுதி மக்களின் ஏகோபித்த குரலுக்கு செவிசாய்த்து, தனது அமைச்சர் பதவியை துறந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் மாபா பாண்டியராஜன். 10 ஆண்டுகளா அரசியலில் இருந்தாலும் இதுவரை இவர் மீது எந்தவொரு புகாரும் எழவில்லை.

அரசியலில் பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து நேர்மையை கடைபிடிக்க நினைக்கும் மாபா பாண்டியன் போன்ற திறமையானவர்களின் அரசியல்வாழ்வு மாபியா கும்பலால் அஸ்தமித்து விடக் கூடாது என்பதுதான் அனைவரது ஆதங்கம்.