தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அ.தி.மு.கவின் சசிகலா பிரிவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று பதவியேற்றார்.

இதையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் பொதுமக்கள் தங்கள் எம்எல்ஏக்களை ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்க வலியுறுத்த வேண்டுமென நேற்று பன்னீர்செல்வம் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பன்னீர்செல்வம், ஒரு குடும்ப ஆட்சி அமைவதை பொறுத்துக்கொள்ளாமல் மக்கள் தங்கள் மன உணர்வுகளை அமைதியான முறையில் தங்கள் எம்எல்ஏக்களிடம் தெரிவித்துவருவதாகவும் அப்படி கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கைதுசெய்து திருமண மண்டபங்களில் அடைப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அவர்களை விடுவிப்பதோடு, காவல்துறையினர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.