போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், போக்குவரத்து இழப்பை அரசு ஏற்க வேண்டும், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மே 15 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

அதன்பிறகு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், 15-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம், 14-ம் தேதி மாலையே தொடங்கியது. பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை முதல் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்தது. பெரும்பாலான ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வரவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கின. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. சில இடங்களில் கூடுதலாக தனியார் பேருந்துகள், வேன்கள் இயக்கப் பட்டன. அரசுப் பேருந்துகளுக்காக காத்திருந்த பொதுமக்கள், வேறு வழியின்றி தனியார் பேருந்துகள், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர்.