சென்னை: மு. க. ஸ்டாலின் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

ஸ்டைலின் அறிக்கையில் “தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த முதல் திராவிட முன்னேற்றக் கழக அரசு 23.1.1968 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

மொழிப் போராட்டத்தில் மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட மிக முக்கியமான நடவடிக்கை என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது. அந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வழிவந்து, சட்டமன்ற வைரவிழா காணும் தலைவர் கலைஞர் அவர்கள் “முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம்” என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13.6.2006 அன்று இயற்றி தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள தாய் மொழி மிக அவசியம்” என்றும், “அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை” என்றும் கூறி “தமிழ் மொழி கற்கும் சட்டம் 2006” செல்லும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, அங்கும் இந்தச் சட்டம் செல்லும் என்று கூறப்பட்டு, கழகம் ஆட்சியிலிருந்த வரை இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் 525 பேர் நியமிக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக கற்பதில் எந்தத் தொய்வும் இல்லாமல் தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்துக் கொண்டார்.