7 நாட்களிலேயே இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ எட்டியுள்ளது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் ‘பாகுபலி 2’. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பாகுபலி 2’ படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.

ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்த பாகுபலி 2

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘பாகுபலி 2’. இந்தியளவில் அதிக வசூல் என்ற சாதனையை ‘தங்கல்’ படமும், உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை ‘பி.கே’ படமும் முதல் இடத்தில் இருந்தது.

இன்று இந்தியளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை எட்டியுள்ளது ‘பாகுபலி 2’. இதனை ‘பாகுபலி’ படத்துக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சுமார் 700 கோடி வசூலை எட்டியுள்ளது. விரைவில் உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் முறியடிக்கும் என்று கணித்துள்ளார்கள்.

தமிழகத்தில் ‘எந்திரன்’ படத்தின் வசூல் சாதனையை இன்னும் ஓரிரு நாட்களில் ‘பாகுபலி 2’ முறியடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.