சசிகலா ஆட்சியமைக்க ஆளுநர் இன்று அழைப்பார் என எதிர்பார்ப்பதாகவும், ஓபிஎஸ்ஸுடன் சென்றவர்கள் விரைவில் கட்சிக்குத் திரும்புவார்கள் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகைச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சசிகலாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சட்ட வல்லுநர்களும் அவர் பதவியேற்கத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆனால் ஆளுநரின் தாமதம், யூகங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. ஆளுநரின் தாமதத்துக்குப் பின்னால், பாஜகவும் திமுகவும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

சசிகலாவுக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவரே முதல்வர் ஆவார். 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள பன்னீர்செல்வத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரை ஆதரித்தவர்கள் அனைவரும் விரைவில் கட்சிக்குத் திரும்புவார்கள்.