வேலூர்: ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் கடை அருகே சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பு அவ்வழியாக சென்ற பெண்களை டாஸ்மாக் கடைக்கு வந்த குடி’மகன்கள் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் சவ மேளத்துடன் வைக்கோலை பிணம் போல செய்து அதனை வண்டியில் வைத்து பாடை கட்டி எடுத்து வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்த ஆரம்பித்தனர். நிலைமையை சமாளிக்க முடியாததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.பெண்களின் முடியை பிடித்து இழுத்தும், பெண்களின் மீது தாக்கியும் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.