லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திருவண்ணாமலை அருகே, வீட்டு மனை அளக்க, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், அவரது உதவியாளர் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், முக்குரும்பை கிராமத்தை சேர்ந்தவர் மாலிக்பாஷா, 23. இவர், கஸ்தம்பாடி கிராமத்தில் ஒரு வீட்டு மனை வாங்கியுள்ளார். இதை அளவீடு செய்து தருமாறு, போளூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் கார்த்தி, 24, என்பவரிடம் கூறினார். இதற்கு, 6,000 ரூபாய் சர்வேயர் கார்த்தி லஞ்சமாக கேட்டார். மாலிக்பாஷா, 4,500 ரூபாய் தருவதாக கூறினார்.

இதுகுறித்து மாலிக்பாஷா, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஏற்பாட்டின் படி, நேற்று மாலை, 5 மணிக்கு, வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே நின்று கொண்டிருந்த சர்வேயர் கார்த்தியிடம், 3,000 ரூபாயையும், உதவியாளர் ஓய்வு பெற்ற சார் ஆய்வாளர் சுப்பிரமணியனிடம், 1,500 ரூபாயையும் மாலிக்பாஷா கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், அவர்கள், இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.