திமுக உறுப்பினர்கள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் திமுக இன்று உண்ணாவிரத போராட்டம்

கடந்த 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

திருச்சி, தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8.50 மணியளவில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.

திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர் மற்றும் பொதுமக்களுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், திமுக நிர்வாகிகளோடு ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.