‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை

சென்னையில், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. அந்த பழைய ரேஷன் கார்டுகளை புதுப்பித்து தருவது மட்டுமே அரசு செய்து வந்தது. பலரது ரேஷன் கார்டுகள் கந்தலாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ‘ஆதார்’ எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன.

பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும், பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.

அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.

ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

சென்னையில் மட்டும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன இருக்கும்?

ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ‘பான் கார்டு’ வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’ என, அச்சிடப்பட்டிருக்கும்.

அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும்.

பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் ‘கியூ.ஆர்.,’ என்ற ரகசிய குறியீடு இருக்கும்.

கார்டின் கீழ் பகுதியில், ‘இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது’ என, எழுதப்பட்டிருக்கும்.

ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை. முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்.

மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.

எத்தனை வகை?

ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், ‘பி.எச்.எச்., – ரைஸ்’ என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; ‘பி.எச்.எச்., – ஏ’ என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.

என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.

‘என்.பி.எச்.எச்., – எஸ்’ என்றிருந்தால், சர்க்கரை; ‘என்.பி.எச்.எச்., – என்.சி.,’ என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.