அதிமுக புதிய சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் காபந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. சசிகலாவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தும், ஆட்சி அமைக்க அவரை அழைக்காமல் கவர்னர் தாமதப்படுத்துவதாக சசிகலா தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனால் கவர்னர் எப்போது முடிவு எடுப்பார்? என்ன முடிவு எடுப்பார்? என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர். சசிகலா மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை சசிகலா குற்றவாளி என தீர்ப்பு  வழங்கி  கர்நாடக உயர்ந் ஈதிமன்றம் வழ்ங்கிய 4 வருட ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில்  இன்று காலை தீர்ப்பு வெளியான பிறகு கூவத்தூரில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி இருந்தார்.

யாரை முதலமைஅச்சராக தேர்ந்து எடுப்பது என்பது பற்றி சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.அனைஅத்து எம்.எல்.ஏக்களும் ஏற்று கொள்ளும் வகையில் ஒருவரை முதல்வராக தேர்ந்து எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு உள்ளார். எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

125 எம்.எல்.ஏக்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். எம்.எல்.ஏக்களில் ஒருவரை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்து எடுக்க உள்ளோம். என கூறினார்.