கடந்த 7 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வம், 40 நிமிடம் தியானம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

பின்னர், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இச்சூழலில், கட்சியின் பொருளாளர் பதவியிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

தமிழக கவர்னரே இறுதி முடிவு எடுப்பார்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன், “அ.தி.மு.க. ரவுடிகளின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

மேலும், மதுசூதனன் தலைமையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் சந்தித்தனர்.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அவைத்தலைவர் பதவியிலிருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அ.தி.மு.கவின் புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.