ஊழலில் திளைக்கும் அதிமுக அரசை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர அரசு தொழில் முதலீட்டாளர்களை விருந்தினர்களைப் போல வரவேற்பதாகவும், ஆனால், தமிழக அரசோ தமிழகத்தில் தொழில் தொடங்க வருவோரிடம் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், தமிழக அமைச்சர்கள் எவ்வளவு தங்களுக்கு எவ்வளவு தருவீர்கள் என்று கேட்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் முதலீடுகள் சரிவதற்கு இதுதான் காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதைப் பொறுத்தவரை கடந்த ஆறு ஆண்டு கால அதிமுக ஆட்சி இருண்ட காலமாக உள்ளது என்றும், இந்த ஆட்சி நீடிக்கும் பட்சத்தில் தமிழகத் தொழில்துறை இன்னும் மோசமான சரிவுகளை சந்திக்கப் போவது உறுதி என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.