பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவரது அணியின் முக்கிய நிர்வாகிகள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உடன் இருந்தனர்.

வெற்றியை நோக்கி தர்மயுத்தம்: ஓ.பன்னீர்செல்வம்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தே ஆலோசனை செய்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பினால் பா.ஜ.க.வுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.