பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக, காங்கிரஸ் முடிவு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக மற்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக அதிமுக பிளவு கண்டுள்ளது. இந்நிலையில் எந்த அணிக்கு பலம் அதிகம் என்பதை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பில் சசிகலா அணியின் சார்பில் முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்குள் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து திமுக உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் திமுக கொறடா எடுத்து முடிவை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது.