சென்னை: அ.தி.மு.க., ஒற்றுமையை யாரும் உடைக்க முடியாது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ.,க்கள்பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என சசிகலா தெரிவித்தார். அந்த கூட்டத்தில் சசிகலா கூறிகையில்,’ அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. துரோகிகள் பின்னாள் செல்ல வேண்டாம். அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர்.

சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர் பேசியதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிரிகள் சதி செய்கிறார்கள். நாம் யார் என்பதை காட்ட வேண்டும். துரோகமும் எதிரியும் கைகோர்த்து வருகின்றனர். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். துரோகத்தை துரத்தி அடிப்போம் .

தற்போது பன்னீர் செல்வத்தால் கட்சிக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் என்ற முறையில் இதை தீர்க்க வேண்டியது என்னுடைய கடமை. அம்மா இறந்தபின்னர் என்னை பொறுப்பு ஏற்குமாறு ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், நான் சோகத்தில் இருந்ததால் ஏற்றுக் கொள்ளவில்லை.