தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகன ராவ் வீட்டில்,நேற்று வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.எனவே அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.இதனை தொடர்ந்து ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.இடை நீக்க உத்தரவானது அஞ்சல் மூலமாக ராம மோகன ராவிற்கு அனுப்பப்பட்டது.அதனை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் கிரிஷா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்,தமிழக தலைமைச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஷா வைத்தியநாதனுக்கு,தமிழக தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.நிர்வாக சீர்திருத்த ஆணையம் மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை கூடுதல் பொறுப்பாக கிரிஷா வைத்தியநாதன் கவனிப்பார்.ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தலைவராகவும் அவர் செயல்படுவார்.

01-07-1959 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த கிரிஜா வைத்தியநாதன்,தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.1981-ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பேட்சை சேர்ந்த இவர்,தற்போது நிர்வாக சீர்திருத்த ஆணையராக பணியாற்றி வருகிறார்.இவருடைய தந்தை வெங்கட்ரமணன்,இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றிய சிறப்புடையவர்.தொழில் முதலீட்டுக் கழகம்,மதுரை மாவட்ட ஆட்சியர்,சுகாதாரத் துறை செயலர் போன்ற பல்வேறு பதவிகளை அவர் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.