நீட் தேர்வு விவகாரத்தில் என் கரங்கள் கட்டப்பட்டிருந்தன என்று பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நான் அமைச்சராக இருந்த போது ஒரு வேளை நீட் தேர்வு வந்துவிட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்தேன்.

யார் இந்த மாஃபா பாண்டியராஜன்?

ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் முயற்சியை எடுத்தனர். அந்த முயற்சியை தமிழகம் முழுவதும் பரப்பி, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்தேன். இது தொடர்பாக ஆன்லைன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவும் முயற்சி எடுத்தேன்.

அப்போது பல அமைச்சர்கள் இதை எதிர்த்தார்கள். அரசே பயிற்சி மையம் நடத்துவதா என எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது பயிற்சி மையம் நடத்தினால் வழக்குக்கு பாதகமாகவோ, பலவீனமாகவோ அமைந்துவிடும் என்று கூறினார். என் கரங்கள் அப்போது கட்டப்பட்டிருந்தன” என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.