பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை திருமங்கலம்–நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை (இன்று) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015–ம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.

ஸ்மார்ட் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் அட்டையின் குறைந்தபட்ச விலை ரூ.100 என்றும், தேவைக்கேற்ப ஸ்மார்ட் அட்டையில் பணத்தை நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

கோயம்பேடு–விமான நிலையம் இடையிலான பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்ட போதே அதற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்ற முணுமுணுப்பு மக்களிடம் எழுந்தது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, மெட்ரோ ரெயில்சேவை விரிவாக்கம் செய்யப்படும் போது கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு மாறான செயல்களில் மெட்ரோ நிறுவனம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஸ்மார்ட் அட்டைக்கான கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் கட்டுபடியாகும் வகையில் குறைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.