இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் புதன்கிழமையன்று சிறைப்பிடிக்கப்பட்ட 29 மீனவர்கள் உட்பட 51 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் 114 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என முதல்வர் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் சிறைபிடிப்பால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பன்னீர் செல்வம், இந்த விவகாரத்தில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.