ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் மத்திய சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தமிழர் பண்பாட்டோடு கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாகவுள்ளது. கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட சட்ட சிக்கல்களாலும், உச்ச நீதிமன்ற வழக்கினாலும் போட்டியை நடத்த முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு அந்த சிக்கல்களை எல்லாம் மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளில் சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிகளுக்கு பிற தேசிய கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசும், தமிழக பாஜகவும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை” என்று தமிழிசை கூறியுள்ளார்.