தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு பிப்ரவரியில், தமிழகத்திலே உள்ள விளை நிலங்கள் வழியாக “கெயில்” நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தற்போது தீர்ப்பு வழங்கிய போது, 3-2-2016 அன்று நான் ஒரு அறிக்கை விடுத்துள்ளேன்.

மேலும், இந்தப் பிரச்சினை பற்றி 25-3-2013 அன்று நடைபெற்ற தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்திய எரிவாயுக் கழகம் கேரளா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களைத் தவிர்த்துவிட்டு, அரசுக்குச் சொந்தமான சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இப்பணியைத் தொடர இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தோம். 17-4-2013 அன்றும் நான் இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தேன்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்தக் குழாய்கள் விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்து கூறிவருகிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்து, திட்டத்தைச் செயல்படுத்துமாறு 2013-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் ஆணைக்குத் தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சுப்ரீம் கோர்ட்டு “கெயில் நிறுவனத்திற்குத் தடைவிதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த எரிவாயு திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம்” என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது நான் அறிக்கை விடுத்தேன்.

ஆனால் நமது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் மத்திய அரசின் மந்திரி ஒருவரே பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். அதாவது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப் பிறகு, விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக இருந்தது, மத்திய அரசும், கெயில் நிறுவனமும் சேர்ந்து இந்தப் பிரச்சினையில் மறுபரிசீலனை செய்யக்கூடும் என்பதாக இருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய அரசின் பெட்ரோலிய துறை இணை மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் கூறும்போது, மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றி கெயில் நிறுவனத்துடன் ஆலோசித்த போது, தமிழக அரசும், விவசாயிகளும் விரும்புவதைப் போல நெடுஞ்சாலைகள் வழியாக உயர் அழுத்தக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமில்லாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி இவ்வாறு கூறியிருப்பது, மேற்கு மண்டல விவசாயிகளிடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் அச்சத்தைப்போக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்றும் தெரியவில்லை.

மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் மோடியும் தமிழ்நாட்டிற்கு மிகவும் துணையாக இருப்பதாக பேசியுள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.