தமிழக அரசியலைப் பற்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் கமல். அவருடைய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

இந்நிலையில், தமிழர்களை பொறுக்கிகள் எனப் பதிவிட்டு வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் அளித்த பதில் ஒன்றில், “எனக்கு பாஜகவைப் பற்றி தெரியாது. ஆனால் இந்த எலும்பில்லாத, பகட்டான முட்டாள் கமல்ஹாசனை எதிர்ப்பேன்” என்று தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலளிக்கும் வகையில், “என்னிடம் கருத்து வேறுபாடு என்கிற ஒரு எலும்பு உள்ளது. அது போதும். சுப்பிரமணிய சுவாமி தமிழர்களை பொறுக்கி என்றார். எனவே நான் அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எதிர்ப்பார்கள்.

என் பதிலில் முரட்டுத்தனம் இருக்காது. மோசமான அரசியல் பரிமாற்றங்களில் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம். அவருக்கு வேண்டுமானால் உணவில் எலும்பில்லாதது பிடிக்கலாம். எனக்கு அப்படி அல்ல. உங்கள் உணவை ரசித்து சாப்பிடுங்கள் சார்” என கிண்டல் செய்யும் தொனியில் பதிவிட்டுள்ளார் கமல்.