சென்னை: போலீஸ் மானிய கேரிக்கை மீது ஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.,வுக்கு தைரியமில்லை என தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: போலீஸ் மானிய கோரிக்கையின் போது தி.மு.க., உள்ளே இருக்கக்கூடாது என்பதால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச ஜெ.,வுக்கு தைரியமில்லை.

தி.மு.க., உறுப்பினர்களை சட்டசபையில் வைத்து ஜெ., விமர்சனம் செய்திருக்க வேண்டும். எல்லாரையும் வெளியேற்றிவிட்டு விமர்சனம் செய்வதால் என்ன பயன்? கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும் எனக்கூறும் ஜெ., அவர் வருவதற்கான வழிமுறைகளை செய்ய தயாராக இல்லை. இதனால் சவால் விடுவதால் அர்த்தமில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது பற்றி முதலில் பேச வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. தன் ஆட்சியில் நடந்த தவறுகள் பற்றி முதலில் ஜெ., பதில் சொல்ல வேண்டும். பல வழக்குகள் பிரச்னைகளுக்கு எந்த பதிலும் இன்று வரை சொல்ல முடியவில்லை. ராமஜெயம் கொலை வழக்கில் இது வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறினார்.