மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இதனை தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு சந்தேகம் எழுப்பப்பட்டு வருவதால், அவரின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என்றும், அது பொதுமக்களின் பார்வைக்கு அனுமிதிக்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக அணிகள் இணைப்புக்கு, ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை கமிஷன் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை ஆணையம் அமைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒப்புக் கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.