அரசு பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சசிகலாவுடன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சந்திப்பு தொடர்பான செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். உயர்கல்வியின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை குற்றம்சாட்ட வேண்டிய அவசர தேவையை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். துணைவேந்தர் பதவியின் மரியாதையையும் கவுரவத்தையும் நிலைநிறுத்துமாறு அவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபரை உயர்கல்வித் துறையின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் கல்வியாளர்கள் சந்திப்பது நெறிமுறையற்ற செயல். அது தேவையற்றது மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது. துணைவேந்தர்களின் இத்தகைய மனப்பான்மை, அவர்கள் பல்கலைக்கழங்களின் வேந்தருக்கும் மாநிலத்தின் உயர்கல்வி மேன்மைக்கும் விசுவாசமாக இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் உள்ளது.

மறைந்த முதல்வருக்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் சசிகலாவை சந்தித்து வந்ததாக ஒருசில துணைவேந்தர்கள் சொல்லியிருந்தாலும் அவர்கள் சந்திப்பின் நோக்கம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. துணைவேந்தர்கள் தங்கள் பதவியின் நியமனம், நடத்தை, விதிமுறைகளை மீறியிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

எனவே, பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தாங்கள் அந்த துணைவேந்தர்களை பதவிநீக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர் பதவி அரசியலாக்கப்படுவதையும், நாட்டின் எதிர்காலமாக திகழக்கூடிய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைத்திடும் வகையில் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அந்தஸ்தின் கண்ணியம் சிறுமைப்படுத்தப்படுவதை தடுக்குமாறும், கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.