சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார்.

‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ என்பார்கள். நான் அந்த கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறேன். டைரக்டர் கதையை சொன்னதும் பிடித்தது. தயாரிக்க முடிவு செய்தேன். இந்த படத்தை நானே டைரக்டு செய்யலாமே? என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு இந்த கதை என்னை ஈர்த்தது. கிராமத்து பின்னணியில் படம் சிறப்பாக வந்துள்ளது.

சாதிய பிரச்சினைகள் எனது படங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே சாதிக்குள் நடக்கும் விஷயங்களை தான் சொல்கிறோம். சாதி மோதல் கதைகளில் நடிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே வைத்து இருக்கிறேன். ‘கிடாரி’ நான் தயாரித்துள்ள 8-வது படம். திரையுலக பிதாமகன் பாலுமகேந்திராவை வைத்து ‘தலைமுறைகள்’ படத்தை நான் தயாரித்தது பெருமையான விஷயம். அடுத்து புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்க இருக்கிறேன்.

தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன். சுவாதி, அனன்யா, லட்சுமி மேனன் ஆகியோர் இரண்டு தடவை எனக்கு ஜோடியாக நடித்துள்ளனர். நிகிலா விமலும் ‘வெற்றிவேல்’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘கிடாரி’ படத்தில் என்னுடன் நடிக்கிறார். அதிரடி, குடும்ப பாசம், நகைச்சுவை அனைத்தும் படத்தில் இருக்கும். விரைவில் குழந்தைகள் படம் ஒன்றை தயாரிப்பேன். சில படங்களில் நடித்த பிறகு மீண்டும் படங்கள் டைரக்டு செய்வேன்.

இயக்குனர்கள் பாண்டிராஜ், பிரபாகரன், முத்தையா, சாக்கரடீஸ், பிரசாத் முருகேசன் ஆகிய 5 பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மேலும் 5 புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்ய இருக்கிறேன்.