தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகார யுத்தம் காரணமாக, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன.

சசிகலாவுக்கு எதிராக யுத்தம் போர் நடத்தி வரும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் தங்களது ஆதரவை பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம்,  ’அரசு எந்திரம் நல்லபடியாக செயல்படுகிறது. தலைமை செயலர், டி.ஜி.பி., ஆகியோரை அழைத்து அரசு நிர்வாகம் குறித்து பேசினேன் என்றும், இன்று தலைமை செயலகத்திற்கு நேரில் செல்வேன்’’ என்று கூறினார்.

இதையடுத்து இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்ல உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் விசாரணை கமிஷன் அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்தும், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றியும் உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.