தமிழகத்தில் கல்வித் திட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு புதிய முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நாளை மறுநாள் (19-ந்தேதி) இதே அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த அரசு முடிவு செய்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கல்வி அதிகாரிகளுடன் இன்று  நடந்த ஆலோசனைக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன்.

நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு  உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுத்து அரசாணை வெளியிடப்படும்.

இதற்காக பிளஸ்-1 பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.

புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி அளிப்பது குறித்து நாளை மறுநாள் அரசாணை வெளியிடப்படும்.