”திருடன் மாதிரி நான் போலீஸ் ஜீப்பில் எல்லாம் அமர மாட்டேன். எவ்வளவு தொலைவு இருந்தாலும் நடந்தே செல்வேன்” என சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு போலீசாரிடம் சசிகலா வாதம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டார்கள்.
முன்னதாக நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த சிட்டி சிவில் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.  சிறையில் சசிகலா, இளவரசிக்கு முதலில் சிறையின் நுழைவு வாயில் அருகில் மகளிர் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை காரில் பெங்களூர் சென்றடைந்த சசிகலாவின் கார் பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு அழைத்து செல்லப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது வன்முறைகளை தவிக்கும் விதமாக அவரை ஜீப்பில் ஏறுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, ”நான் ஒன்றும் திருடன் இல்லை. நான் போலீஸ் ஜீப்பில் அமர மாட்டேன். சிறை அறையில் உட்காருவேன். திறந்த ஜீப்பில் ஒரு திருடன் மாதிரி நான் அமர மாட்டேன்” என்று பிடிவாதமாக கூறிவிட்டார். கடந்த முறை 2014ல் இதே சிறையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இருந்தது.