சசிகலாவை எல்லோருக்கும் தெரியும்! யார் இந்த இளவரசி?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த 30 வருடங்களாக தங்கியிருந்த இளவரசி சசிகலாவின் அண்ணன் மனைவி ஆவார். சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மூவரும் சொந்தக்காரர்களே!

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி தான் இளவரசி. ஜெயராமன் ஆந்திராவில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான திராட்சை தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அங்கு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி ஜெயராமன் இறந்துவிட்டார். அதன்பின்னர் இளவரசி தனது குழந்தைகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் விவேக் ஆகியோருடன் போயஸ் தோட்டத்தில் குடியேறினார்.

இளம் வயதில் கணவரை இழந்த இளவரசி போயல் தோட்டத்திற்கு வந்த பின்பு ஜெயலலிதா அவரையும், அவர் குழந்தைகளையும் பாசமாக பார்த்துக்கொண்டார். போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்தது சசிகலா தான் என்றாலும், பின்னாளில் அவர்கள் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் வளர்ந்த இளவரசியின் இளைய மகள் ஷகிலாவை ராஜராஜன் என்பவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பின்பு சிங்கப்பூர் சென்றவர், சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்தார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு சசிகலாவின் சொந்தக்காரர்கள் அனைவரும் போயஸ் கார்டனில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் இளவரசி மட்டும் வேதா இல்லத்தில் தங்கியிருந்தார்.

சசிகலாவின் சொந்தங்கள் குறித்து இளவரசி தான் ஜெயலலிதாவிடம் எல்லாவற்றையும் சொல்லி வந்துள்ளார். இளவரசி தனது குடும்ப உறுப்பினர்களை அதிகார மையத்திற்கு கொண்டு வந்தார். சசிகலா, இளவரசி, நடராஜன் ஆகிய மூவருக்கும் நடந்த சண்டையில் எல்லோரும் வீழ்த்தப்பட்டார்கள். ஆனால் இளவரசியை மட்டும் வீழ்த்த முடியவில்லை. காரணம் ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை உள்ளவராக திகழ்ந்தார் இளவரசி.

இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் போயஸ் கார்டனில் வளர்ந்தவர். படிப்பு முடிந்ததும் பெங்ளூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்த போது விவேக்கும் சிறை சென்று வந்ததால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். 2015இல் ஜாஸ் சினிமால் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் ஃபீனிக்ஸ் மால் லீஸ் என ஆயிரம் கோடி சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது சசிகலாவுடன் சேர்ந்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார் இளவரசி. அப்போது சொத்துக்களை அனுபவித்து வந்தவர்கள் முறைகேடான சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தற்போது சிறை தண்டனை அனுபவிக்க உள்ளனர்.