சமூக வலைதளத்தில் எழுந்த குளிர்பான விளம்பர சர்ச்சைக்கு ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், குளிர்பான விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது.

2005-ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார் ராதிகா. அந்த விளம்பரத்தை எடுத்து, ராதிகாவை கிண்டல் செய்யும் தோனியில் எடிட் செய்து வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள்.

இந்த சர்ச்சைக் குறித்து ராதிகா சரத்குமார் “உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 2005-ல் எடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் அது. ஆமிர்கான் அதன் இந்தி வடிவத்தை செய்தார். அது குறித்து இப்போது பேசுவது மனச் சிக்கலையே காட்டுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.