மக்கள் விரும்பும் திமுக ஆட்சியை நிலைபெறச் செய்ய சூளுரை ஏற்போம் என தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ”தமிழகம் மோசமான, நெருக்கடியான அரசியல் சூழலில் அகப்பட்டுக்கொண்டுள்ள நிலையில், அதனை மீட்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்குதான் இருக்கிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்

கருணாநிதியின் வழிகாட்டுதலில் செயல்படும் இந்த இயக்கம் எப்போதும் தமிழ்-தமிழர் நலன் சார்ந்தே சுழலும். தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தருவதிலிருந்து, தடைகளுக்கு நடுவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிறப்பு சட்டத்தின் மூலம் நடத்திக் காட்டுவது வரை தமிழர்களின் உரிமையையும், பண்டை தமிழ் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாப்பதில் திமுக என்றும் சோர்வடைந்தததில்லை.

பீடும், பெருமையும் வாய்ந்த நம் தமிழகம் இன்று, உச்ச நீதிமன்றத்தாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியின் கண்ஜாடைக்கேற்ப ஆடும் பொம்மை ஆட்சியாளர்களால் வழிநடத்தப்படும் பேரவலத்தில் சிக்கியிருக்கிறது. மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகவும் நடைபெறும் ஆட்சி எப்போது தூக்கியெறியப்படும் என்ற ஆவலும் வேகமும் தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் ஊடகத்தினரும், பொதுமக்களும் இதுபற்றி கேட்கும்போது “திமுக ஒருபோதும் குறுக்கு வழியில் செயல்படாது நேர்மையான வழியில் சட்டப்பூர்வமான முறையிலேயே செயல்படும்” என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

லஞ்ச ஊழலில் திளைக்கும் குற்றவாளி நடத்தும் ஆட்சியை சட்டப்பூர்வமாகவும், அமைதியான ஜனநாயகப் புரட்சி மூலமும் அகற்றிவிட்டு, மக்கள் விரும்பும் திமுக ஆட்சியை நிலைபெறச் செய்வதுதான் நமது ஒரே செயல்திட்டம் என்று சூளுரை ஏற்போம். அந்த சூளுரையை நிறைவேற்ற பசிநோக்காது, கண்துஞ்சாது, மெய்வருத்தம் பாராது அனைவரும் அனுதினமும் உழைத்திடுவோம்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.