சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என சபாநாயகர் தனபால் உறுதிபட தெரிவித்து விட்டார். நேற்றைய சட்டசபையில் ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 80 திமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து இன்று சபை முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.சட்டசபைக்கு சஸ்பெண்ட் செய்யப்படாத நேரு, பூங்கோதை, காந்தி, பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்,மோகன், அன்பழகன், ராமச்சந்திரன், உள்ளிட்டோர் இன்று வந்தனர்.

திமுக உறுப்பினர்களும் , காங்., உறுப்பினர்களும் திமுக எம்எல்ஏ.,க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்த பின்னர் இந்த பிரச்சனையை எழுப்பலாம் என்றார்.

ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். திமுக உறுப்பினர்கள் அவையில் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஒருமையில் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறினார். இதனை தொடர்ந்து காங்., திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.