தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார்.

2006ல் ஆட்சியில் இருந்த திமுக, 2011ல் தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலிலும் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாரின் அறையில் தனியாக சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு சட்டப்பேரவை லாபிக்கு மட்டும் கருணாநிதி அவ்வப்போது வந்து கையெழுத்திட்டுச் சென்றார். சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த மே 26ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று 13வது முறையாக எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம்தான் கருணாநிதி பேரவைக்குள் வந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. தற்போது பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. திமுகவினர் அமளி காரணமாக சட்டப்பேரவை கூட்டம்  ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. பேரவையில் இன்று மின்துறை மானியக்கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில், நண்பகலில் திமுக தலைவர் கருணாநிதி திடீரென சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி, அங்கிருந்து சென்று விட்டார்.