டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன். முன்னாள் எம்.பி.யான டிடிவி தினகரன் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை சசிகலா கடந்த 15-ம் தேதி அன்று கட்சியில் மீண்டும் சேர்த்தார்.

அதிமுக தொண்டர்கள் யாருக்கு ஆதரவு?

கட்சியில் மீண்டும் சேர்த்த ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டது.

சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லும் முன், அவர் சிறையிலிருந்தாலும் கட்சி மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது உறவினருக்கு அவசர அவசரமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் டிடிவி தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.