அ.தி.மு.க.பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறி இருப்பதாவது:-

`அம்மா’ (ஜெயலலிதா) என்று கோடானு கோடி மக்கள் பாசத்தோடு அழைத்து,  தங்களுக்காக மண்ணுலகில் வந்துதித்த வானத்து தேவதை என்று போற்றிக் கொண்டாடிய நம் அன்புக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின்  69-ஆவது பிறந்த நாள் 24.2.2017.  ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்த இனிய நாள்.

இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒருபோதும் எண்ணியதில்லை.  ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்தித்துத் தீர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது.

கூவத்தூரில், எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்: ராசிபுரம் எம்.பி

எத்தனை துயர் வந்தாலும், எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று துணிவுடன் போராடி, தனது மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் நம் புரட்சித் தலைவி அம்மா.

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடர்மிகு சூழலை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இதயம் கொண்டு வெற்றி காண்பது தான் அம்மா அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.

தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு என்றும்; தான் வாழ்வதே மக்களுக்காகத் தான் என்றும்; `மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்றும் சித்தரித்து, நம்மிடையே வாழ்ந்த  புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாக்களில், கடந்த காலங்களில் நாம் எப்படி ஏழை, எளிய மக்களுக்காக கொடை உள்ளத்தோடு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினோமோ அதைப் போலவும், இன்னும் அதைவிட கூடுதலாகவும் மக்களுக்கு இந்த ஆண்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்திற்கு வலுவூட்டும் செயல்களை செய்தும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மா இளைப்பாறும் வகையில் நம்முடைய பணிகள் அமைந்திட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.