நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நடிகர் தனுஷ் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.

தனுஷை சொந்தம் கொண்டாடுகிற மதுரையின் மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன் மற்றும் கே. மீனாட்சி தம்பதிய,ர் அவர் கல்வி பயின்றதாக கூறுகின்ற மேலூர் அரசு மாணவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியதாக கூறுகின்ற பள்ளி மாற்றுச் சான்றிதழை முக்கிய ஆதரமாக நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கின்றனர்.

அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் அங்க அடையாளங்களான மச்சங்கள் சரியானவையா என்று சோதித்து அறிவதற்காக தனுஷ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.

அவரது உடல் அடையாளங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழில் வழங்கப்பட்டுள்ள மச்சங்களை சரிபார்த்து தனுஷ், அரசு மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்டார். இந்த மருத்துவ ஆய்வு அறிக்கை நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
இந்த வழக்கை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.