500 டாஸ்மாக் மூடல், ஸ்கூட்டர் மானியம் முதல்வர் பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் தமது பணிகளைத் துவக்கினார். அப்போது, 2016-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு அத்திட்டங்களைச் செயல்படுத்திட ஆணையிட்டார்.

முதலமைச்சர் ஆணை பிறப்பித்து கையொப்பமிட்ட ஐந்து கோப்புகளின் விவரம்-

1) மகளிர் இரு சக்கர வாகனங்கள் வாங்க ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படும்

2) ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார். ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

3) தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

4) வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 100லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 150லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 200லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 300லிருந்து ரூபாய் 600 ஆகவும் உயர்த்தியும் ஆணையிட்டு அதற்குரிய கோப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டார்கள்.

5) 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆணையிட்டார். மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான ஆணையிட்டு, அதைச் செயல்படுத்தும் வகையில் அக்கோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்டுள்ளார்.