சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும் என்று சிறை அதிகாரி கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சசிகலா: பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்?

“சசிகலா நடராஜன் ரூ.10 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும்” என்று அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை மற்ற கைதிகளை நடத்துவது போல்தான் நடத்தி வருகிறோம், இவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலா, இளவரசி ஆகியோர் பெண்கள் சிறைப்பகுதியில் சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுதாகரன் ஆண்கள் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தயாரிக்கப்படும் உணவுகளே இவர்களுக்கும் வழங்கப்படுகிறது, சிறை மருத்துவர்கள் அவ்வப்போது இவர்கள் உடல் நிலையை கவனித்து வருகின்றனர். பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும் இடத்தில் இவர்களும் தொலைக்காட்சி பார்க்க அனுமதி உண்டு” என்றார்.