சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அரசின் முக்கிய அறிவிப்புகளையெல்லாம் அவரே படிப்பதும், அதைத் தொடர்ந்து அவருடைய தோழமைக் கட்சித் தலைவர்கள் அதைப் பாராட்டுவதும் என வழக்கமாக நடைபெறுவதைப் பார்க்கும்போது எதிர்க்கட்சியினருக்கு எந்த வருத்தமும் கிடையாது.

ஆனால் அந்த அறிவிப்புகள் எல்லாம் செயலாக்கத்திற்கு வருகிறதா? 110வது விதியின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் படிக்கப்பட்ட அறிக்கைகள் எத்தனை? அதிலே கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் செயலாக்கம் பெற்று விட்டனவா? அறிவிப்புகளிலுள்ள திட்டத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாகச் செலவழிக்கப்பட்டு விட்டதா என்பதையெல்லாம் விளக்கும் வகையிலும்.

பொதுமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையிலும் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிய பிறகும், அதனை அரசின் சார்பாக வைக்க பிடிவாதமாக மறுப்பது ஏன்? நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் இந்த 110வது விதியின் கீழான அறிக்கை பற்றிப் படித்த அறிக்கையில், 2013-2014ஆம் ஆண்டு, விதி எண். 110இன் கீழ் 236 திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததாகவும், ஆனால் அதில் 116 திட்டங்களுக்குத்தான் அரசாணைகள் வெளி யிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு எத்தனை திட்டங்களுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன, அதிலே எத்தனை திட்டங்கள் முடிக்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களைப் பேரவையில் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்குவது ஏன்? அந்தத் தயக்கம்தானே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது?

110வது விதியின் கீழ் திமுக ஆட்சியில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் மீது படிக்கப்பட்ட அறிக்கைகளின் எண்ணிக்கை 46 தான்! இந்த 46 அறிக்கைகளையும் முதலமைச்சர் என்ற முறையில் நான் தான் படித்தேனா? 18 அறிக்கைகளைத்தான் முதல்வர் என்ற முறையில் நான் படித்திருக்கிறேன். துணை முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் 8 அறிக்கை களையும் – நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் 3 அறிக்கைகளையும் – பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் 5 அறிக்கைகளையும் – வேளாண் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் 1 அறிக்கையையும், உயர் கல்வி அமைச்சராக இருந்த முனைவர் கே. பொன்முடி 1 அறிக்கையையும் – வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி 1 அறிக்கையையும் – உணவமைச்சராக இருந்த எ.வ. வேலு 2 அறிக்கைகளையும்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு 2 அறிக்கைகளையும் – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 2 அறிக்கை களையும் – செய்தித் துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி 1 அறிக்கையையும் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 1 அறிக்கையையும் – பால் வளத் துறை அமைச்சராக இருந்த மதிவாணன் 1 அறிக்கையையும் பேரவையிலே படித்திருக்கிறோம் என்பதையும், அமைச்சரவை யின் கூட்டுப் பொறுப்பு எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும் அவை நடவடிக்கை குறிப்பினை எடுத்துப் பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

26-8-2015 அன்று இந்த அறிவிப்புகள் பற்றி நான் எழுதிய “உடன்பிறப்பு” மடலில் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் அன்றைய நிலை என்ன என்பதை விவரித்து, “நான்காண்டு காலத்தில் 110வது விதியின் கீழ் படித்த அறிவிப்புகளில் அடங்கியிருக்கும் திட்டப் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாய். அதிலே செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 734 கோடி ரூபாய்தான். அதாவது 12.09 சதவிகிதம்தான். கடலளவு அறிவித்து விட்டு, கையளவு மட்டுமே செய்ததற்கு என்ன பதில்?” என்று கேட்டிருந்தேன்; பதிலே தரவில்லை; உரிய பதிலும் உண்மையும் இருந்தால்தானே, உரக்கச் சொல்வதற்கு? சொல்லுக்கும் செயலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டு, சொல்வது எதற்கு? சொன்னதற்குப் பாராட்டு ஏன்? சொல்வதெல்லாம் வெற்று விளம்பரத்திற்குத்தான்; அனைவரையும் ஏமாற்றுவதற்குத்தான் என்றல்லவா பொதுமக்கள் நினைக்கிறார்கள் எனக்கூறியுள்ளார்.