சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை வைர விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு மிக விமர்சியாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவும் இன்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.

தலைவர்கள் வருகை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.