தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சேலத்திலிருந்து கடந்த 8–ந் தேதி இரவு சென்னை வந்த சேலம் ரெயிலில் ரூ.343 கோடி பணம் எடுத்து வரப்பட்ட பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டு, ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு துணிகரக் கொள்ளை நடந்ததில்லை. கொள்ளை நிகழ்ந்த ரெயில் பெட்டியில் சேலத்தில் துளையிடப்பட்டதா? சென்னையில் துளையிடப்பட்டதா? அல்லது ரெயில் பயணத்தை தொடங்குவதற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு அல்லது கோவையில் துளையிடப்பட்டதா? என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள சென்னை முதலாவது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம் வீட்டின் பூட்டை உடைத்து 400 பவுன் தங்க நகைகள் உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அதேநாளில் கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற கொள்ளைகள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலைகள் நடந்தன. இந்த மாதம் கொள்ளைகள் நடக்கின்றன. கொலைகளும், கொள்ளைகளும் தமிழகத்தில் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றைத் தடுக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக முதல்–அமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

2006–2011 தி.மு.க. ஆட்சியை விட தமது ஆட்சியில் குற்றச்செயல்கள் குறைந்து விட்டதாக ஜெயலலிதா கூறுவதும் உண்மையல்ல. கடந்த 2011–2016 அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொள்ளை சம்பவங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகளும் நடந்துள்ளன. இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயல்கிறார்.

தமிழக காவல்துறை திறமையானது என்பதிலும், அதில் கடமை உணர்வு மிக்க அதிகாரிகள் உள்ளனர் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களுக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் அளிக்கப்படவில்லை என்பது தான் காவல்துறையின் தரம் குறைந்ததற்கு காரணம். எனவே, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வெற்று வசனத்தையே மீண்டும், மீண்டும் பேசுவதை விடுத்து காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பதன் மூலமும், திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிப்பதன் மூலமும் தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.